நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1,80,000 கோடி ஊழல் மத்திய அரசு மீது புதிய குற்றச்சாட்டு.

நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு குத்தகை விட்டதில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக மத்திய அரசு மீது புதிய புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பாராளுமன்றம் முடங்கியது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மக்களவை கூடியவுடன், ஆந்திரா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் மீராகுமார் வாசித்தார். பிறகு, கேள்வி நேரத்தை அவர் தொடங்கினார்.

அப்போது, சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆந்திரா ரெயில் விபத்து பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூச்சலிட்டனர்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் பன்சா கோபால் சவுத்ரி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் எழுந்து மத்திய அரசு மீது புதிய ஊழல் புகாரை தெரிவித்தனர்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுவரை, நிலக்கரி வெட்டி எடுக்க தனியாருக்கு குத்தகை விட்டதில், தேவையற்ற சலுகை காட்டியதால் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவில் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் கூறி உள்ளார் என்று ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

அந்த பத்திரிகையை சபையில் காண்பித்தபடி, பா.ஜனதா, அ.தி.மு.க., இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் சிலர் அமளியில் ஈடுபட்டனர். `ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சியில் 30-க்கும் மேற்பட்ட ஊழல்கள்’ என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இந்த ஊழல் பற்றிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்யாமல் பிரதமர் அலுவலகம் தாமதம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதுபற்றி பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர்.

`கடைசிநாள் கூட்டத்தை சுமூகமாக நடத்த உதவுங்கள்’ என்று அவர்களை பார்த்து சபாநாயகர் மீரா குமார் கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதை ஏற்கவில்லை. இருப்பினும், சபாநாயகர் மீரா குமார், ஒரு கேள்விக்கு பதில் அளிக்க மத்திய உணவு மந்திரி கே.வி.தாமசை அழைத்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சல்-குழப்பத்தால், கே.வி.தாமஸ் பதில் அளித்தது, யாருக்கும் கேட்கவில்லை.

இந்த அமளிக்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன்குமார் பன்சாலை அழைத்து, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பற்றிய விவரத்தை கேட்டார். அதற்கு பன்சால், பத்திரிகை செய்தி குறிப்புகளை சோனியாவிடம் காண்பித்து விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்து நீடித்ததால், சபையை பகல் 12 மணிவரை சபாநாயகர் மீரா குமார் ஒத்தி வைத்தார்.

பகல் 12 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் பன்சா கோபால் சவுத்ரி, நிலக்கரி ஊழல் விவகாரத்தை மீண்டும் எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், மகாரத்தின நிறுவனம் ஆகும். எல்லா நிலக்கரி சுரங்கங்களிலும் நிலக்கரியை வெட்டி எடுக்கும் அளவுக்கு அந்நிறுவனம் திறமை பெற்றுள்ளது. இருப்பினும், அதற்கு வாய்ப்பு அளிக்காமல், 155 நிலக்கரி சுரங்கங்களை மத்திய நிலக்கரி அமைச்சகம் தனியாருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

அவற்றில், 134 சுரங்கங்களில் வேலையே தொடங்கப்படவில்லை. அந்த சுரங்கங்களை எடுத்த தனியார், அவற்றை உள்குத்தகை விட முயன்று வருகிறார்கள். இது, பொதுத்துறை நிறுவனத்தை தாரை வார்க்கும் முயற்சி ஆகும்.

இந்த ஊழல் தொடர்பான தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. தலைமை கணக்கு அதிகாரியின் மதிப்பீட்டின்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலை விட அதிகமான அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது தெளிவாகிறது. இந்த ஊழல் பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இப்பிரச்சினை பற்றி பேச விருப்பம் தெரிவித்தனர். ஆனால், சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

இதேபோல் டெல்லி மேல்-சபையையும், நேற்று இப்பிரச்சினை உலுக்கி எடுத்தது. சபை கூடியவுடனே, பா.ஜனதா உறுப்பினர் ராஜீëவ் பிரதாப் ரூடி, கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, நிலக்கரி ஊழல் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினார். அதை ஏற்க முடியாது என்று சபைத்தலைவர் ஹமீது அன்சாரி கூறினார். பட்டியலில் இல்லாத கேள்விகளை அனுமதிக்க முடியாது என்று அவர் கூறினார்.

நிலக்கரி ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் சிபாரிசு செய்திருப்பதாக கூறி, ஒரு கடிதத்தை பா.ஜனதா உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர், சபையில் காண்பித்தார். அது எதுவும் சபைக்குறிப்பில் ஏறாது என்று ஹமீது அன்சாரி எச்சரித்தார்.

ராஜீவ் பிரதாப் ரூடிக்கு ஆதரவாக பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். நிலக்கரி ஊழல் பற்றிய தணிக்கை அதிகாரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூச்சலிட்டனர். இந்த கூச்சல்-குழப்பத்தால், சபையை 15 நிமிடங்களுக்கு சபைத்தலைவர் ஒத்தி வைத்தார்.

பின்னர், சபை கூடியபோதும், கேள்வி நேரத்தை நடத்த விடாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினர். இதனால் சபை, பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!