பெட்ரோல் விலை உயர்வு - எதிர்க்கட்சிகள் கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என்றும் கூறி உள்ளன.

மத்திய அரசு நேற்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசு உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.

இதுபற்றி பாரதீய ஜனதா செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

மத்திய அரசு பெட்ரோல் விலையை தேவை இல்லாமல் தன்னிச்சையாக மிகவும் அதிகமாக உயர்த்தி இருக்கிறது. நியாயமற்ற இந்த விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து சாமானிய மக்களுக்கு மிகவும் கஷ்டம் ஏற்படும். இதனால் இந்த விலை உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம்.

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையை சரிவர கையாளும் திறமை மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இல்லை. அதனால்தான் ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

சீனாவிலும் மற்றும் தாய்லாந்து, வியட்நாம், வங்காளதேசம் போன்ற சிறிய நாடுகளிலும் இதுபோல் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை. பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

பெட்ரோல் விலை உயர்வை அனுமதிக்க முடியாது என்றும், அதை திரும்ப பெற வேண்டும் என்றும் பாரதீய ஜனதா கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளராக பிரகாஷ் ஜவதேகர் கூறினார். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூடி ஆலோசனை நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை உயர்வு பற்றி கருத்து தெரிவித்த சமாஜ்வாடி செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி; 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாதாரண மக்களுக்கு அளித்துள்ள பரிசு இது என்றார். மக்கள் நலனுக்கு எதிரான இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், நியாயமற்ற இந்த விலை உயர்வை தங்கள் கட்சி எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!