பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 31-ந் தேதி நாடு முழுவதும் "பந்த்".

பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறும்படி வலியுறுத்தி, நாடு முழுவதும் 31-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதுவரை இல்லாத அளவுக்கு, பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரள மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகளை ஒரே அணியில் திரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இந்த `மக்கள் விரோத’ முடிவை கண்டித்து, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வருகிற 31-ந் தேதி (வியாழக்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் அறிவித்து உள்ளது.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் பொறுப்பை வகித்து வருபவருமான எல்.கே.அத்வானி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைப்பாளருமான சரத்யாதவ் ஆகியோர் இதற்கான அழைப்பை கூட்டாக விடுத்துள்ளனர்.

31-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், அதே 31-ந் தேதியை `அகில இந்திய எதிர்ப்பு நாளா’க இடதுசாரி கட்சிகள் அறிவித்து உள்ளன.

அன்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல், பேரணி மற்றும் வேலை நிறுத்தங்கள் போன்ற போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. “பெட்ரோல் விலை உயர்வு, மக்களுக்கு எதிரான மத்திய அரசின் மூர்க்கத்தனமான தாக்குதல்” என்று இடதுசாரி கட்சிகள் வர்ணித்து உள்ளன.

முழு அடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேவும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். சிரோன்மணி அகாலிதளம் கட்சித்தலைவரும், பஞ்சாப் முதல்-மந்திரியுமான பிரகாஷ்சிங் பாதல், `பாரத் பந்த்’தை வெற்றி பெறச்செய்வோம் என்று அறிவித்து இருக்கிறார்.

பெட்ரோலிய நிறுவனங்கள்தான் விலையை உயர்த்தி உள்ளன என்று மத்திய அரசு வாதிட்டு வருவது வெறும் கண்துடைப்பு என்று குறிப்பிட்ட ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், பாராளுமன்றம் நடந்து கொண்டு இருந்தபோது எண்ணெய் நிறுவனங்கள் ஏன் விலையை உயர்த்தவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் `பாரத் பந்த்’ அறிவிப்பை, பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று மும்பையில் நிருபர்களிடம் வெளியிட்டார். பெட்ரோல் விலை உயர்வை மக்கள் விரோத நடவடிக்கை என்று பா.ஜனதா தலைவர் அத்வானி குறிப்பிட்டுள்ளார். 31-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்யும்படி நாட்டு மக்களுக்கு பா.ஜனதா வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு ஜுலை 5-ந் தேதி அன்று `பாரத் பந்த்’ நடத்தப்பட்டது. அப்போது கொள்கை ரீதியாக மாறுபட்டுள்ள பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் போன்ற கட்சிகள் ஒரே அணியில் நின்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

அதே அடிப்படையில், 31-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்தின் போதும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவிடமும் சரத்யாதவ் பேச்சு நடத்தி இருக்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளும் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து வருகின்றன. அதுபோன்ற கட்சிகளுடனும், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜ× ஜனதா தளம் மற்றும் அ.தி.மு.க.வுடனும் இது குறித்து பேச முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக, எதிர்க்கட்சிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பிரச்சினையில் கவனத்துடன் கருத்து தெரிவித்த காங்கிரஸ், பெட்ரோல் விலை உயர்வு, பெட்ரோலிய நிறுவனங்கள் எடுத்த முடிவு என்று குறிப்பிட்டு இருந்தது. என்றாலும், இந்த முடிவு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில், பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டவுடனேயே தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரள மாநிலத்தில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வன்முறை எதுவும் இன்றி அமைதியாக நடைபெற்றது.

ஆந்திர மாநிலம், விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்ட நகரங்களில் தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன. காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் பா.ஜனதா சார்பில் குதிரைவண்டி ஊர்வலம் நடைபெற்றது.

குஜராத்தின் ஆமதாபாத், ஒரிசாவின் புவனேஸ்வரம் மற்றும் உ.பி.யில் கான்பூர், குர்கானிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி, டெல்லி பாராளுமன்ற வளாகம் அருகே மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்ïனிஸ்டு தொண்டர்கள் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கூறி இருக்கிறார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *