தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது கர்நாடக அரசு பிடிவாதம்.

டெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று, கர்நாடக அரசு அறிவித்தது.

காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, காவிரி நதிநீர் கண்காணிப்பு குழு கூட்டம், 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும்.

ஆனால், கடந்த 10 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. மேலும் காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டிய காவிரி தண்ணீரையும் தர கர்நாடகம் மறுத்து வருகிறது.

அதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், “வறட்சி காலத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கீடு செய்வது தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்” என்று, ஜெயலலிதா கோரிக்கை விடுத்து இருந்தார்.

“கர்நாடக மாநில அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை அந்த மாநில அரசு நியாயமற்ற முறையில் பயன்படுத்தி வருவதால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டு, குறுவை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், சம்பா பயிர் அறுவடையும் பாதிக்கப்படுவதாக” அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

அவருடைய கோரிக்கையை ஏற்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தை மத்திய அரசு நேற்று டெல்லியில் கூட்டி இருந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்திற்கு தேசிய நீர்வள ஆதாரத்துறை செயலாளர் துரு விஜயசிங் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவது இல்லை என்று, தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் புகார் கூறினார்கள். ஆனால், தீர்ப்பை முழுமையாக பின்பற்றி நடந்து வருவதாக, கர்நாடக அதிகாரிகள் பதில் அளித்தனர்.

அதே நேரத்தில், கர்நாடகத்திலேயே தண்ணீர் இல்லாத நிலையில், தமிழ்நாட்டிற்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்? என்று கேள்வி எழுப்பி, தண்ணீர் திறந்து விட அவர்கள் மறுத்துவிட்டனர்.

“தண்ணீர் இருந்தால் நிச்சயம் திறந்து விடுவோம். ஆனால், குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலையில் எங்கள் மாநிலத்தின் நலனை பேணுவது அவசியம்” என்றும், கர்நாடக மாநிலம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் கூட்டம் முடிவடைந்ததாக, அதிகாரி ஒருவர் பின்னர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார், நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் சிவசங்கரன், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!