ஆந்திரவில் மீன் மருந்து வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசல் - ஒருவர் பலி, 50 பேர் காயம்.

ஆந்திர மாநிலத்தில் மீன் மருந்து வழங்கும் இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். 50 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

ஐதராபாத்தில் ஆண்டுதோறும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வழங்குவது வழக்கம். அதாவது ஒரு மருந்தை உயிருள்ள ஒரு மீனின் வாயில் வைத்து அந்த மீனை உயிருடன் நோயாளிகள் விழுங்க வேண்டும்.

இந்த மருந்தை வழங்குபவர்கள் நேற்று மருந்தை பூஜை செய்த பிறகு `காட்டேதான்’ விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய கிளம்பினர். இந்த மீன் மருந்து சாப்பிடுவதற்காக ஆந்திர மாநிலம் மட்டுமின்றி, கர்நாடகம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் மக்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் மைதானத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

மீன் மருந்து வழங்கும் இடத்திற்கு ஆந்திராவின் பல நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. இந்த முகாம் 10-ந் தேதி வரை நடக்கிறது. எனவே அரசு சார்பில் 80 ஆயிரம் மீன்கள். ஒரு மீன் ரூ.15-க்கு விற்க ஏராளமான கவுன்ட்டர்கள் அரசு மீன்வளத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தை சமாளிக்க ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று அதிகாலை மீன் மருந்தை மைதானத்திற்குள் கொண்டு வந்தனர். மைதான கேட் திறந்ததும் அங்கு திரண்டு நின்ற ஆயிரக்கணக்கானோர் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

இந்த நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்தனர். அவர்கள் கூட்டத்தினரின் கால்களில் மிதிபட்டு படுகாயம் அடைந்தனர். இதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கோரக் பாட்டீல் (75) என்பவர் மரணமடைந்தார்.

காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!