காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி - சோனியா அறிவிப்பு

காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக, பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியாவின் புதிய ஜனாதிபதி தேர்தல், ஜுலை 19-ந் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே குழப்பமும் தாமதமும் ஏற்பட்டு வந்தது. எந்த ஒரு கட்சிக்கோ, அல்லது கூட்டணிக்கோ புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் அளவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததே இதற்கு காரணம்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 3 நாட்களாக டெல்லியில் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் இருவரும், திடீரென்று புதிய வேட்பாளர்களை அறிவித்தனர்.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் ஹமீது அன்சாரி ஆகிய இருவரையும் ஏற்க மறுத்த அவர்கள், தங்கள் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளர்களாக சிபாரிசு செய்தனர்.

இதனால், பரபரப்பான புதிய திருப்பம் ஏற்பட்டது. ஆனால், அவர்களுடைய யோசனையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துவிட்டார். அதைத் தொடர்ந்து டெல்லியில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த சோனியா காந்தி, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த தற்போதைய நிதி மந்திரியும் மூத்த காங்கிரஸ் தலைவருமான 77 வயது பிரணாப் முகர்ஜிக்கு, கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் பலத்த கரவொலி எழுப்பி ஒருமனதாக ஒப்புதல் வழங்கினார்கள்.

ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரின் பெயரை வெளியிட்டு சோனியா காந்தி வாசித்த அறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் முத்திரை பதித்தவர், பிரணாப் முகர்ஜி என்று குறிப்பிட்டார்.

“பிரணாப்பை வேட்பாளராக அறிவிப்பதற்கு பரவலான ஆதரவு உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றும், அப்போது சோனியா வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்திக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன்சிங், சரத்பவார், பிரபுல் பட்டேல் (தேசியவாத காங்கிரஸ்), அஜித்சிங் (ராஷ்டிரீய லோக் தளம்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), உமர் அப்துல்லா (தேசிய மாநாடு கட்சி) ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

1 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், புதிய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, பவன்குமார் பன்சால் ஆகிய மத்திய மந்திரிகளும், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலும் பங்கேற்றனர்.

பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், அவருக்கு அரசியல் எதிரியாக கருதப்படும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜியுடன் இணைந்து காங்கிரஸ் வேட்பாளரை ஏற்க மறுத்த முலாயம்சிங் கட்சியும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது புதிய திருப்பமாகும். அப்துல் கலாம் உள்பட 3 பேர் பெயரை ஜனாதிபதி பதவிக்கு சிபாரிசு செய்து இருந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான ராம்கோபால் யாதவ், `ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு தங்கள் கட்சி ஆதரவு அளிக்கும்’ என்று தெரிவித்தார்.

முலாயம்சிங்கின் சகோதரரான ராம்கோபால் யாதவ், பிரணாப் முகர்ஜியின் பெயர் அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு மகிழ்ச்சியும் ஆதரவும் தெரிவித்ததுடன், அவர் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்தார்.

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பிரணாப் முகர்ஜிதான் ஜனாதிபதி பதவிக்கு மிகவும் தகுதியானவர். அவருக்கு ஆதரவாக ஓட்டளிக்க எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளது. அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து மற்ற இடதுசாரி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும், பிரதமர் மன்மோகன்சிங் எதிர்க்கட்சி தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லியுடன் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், மாயாவதி (பகுஜன்சமாஜ்), ஏ.பி.பரதன் (இந்திய கம்யூனிஸ்டு), எச்.டி.தேவேகவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்) ஆகியோரிடமும் மன்மோகன்சிங் ஆதரவு திரட்டினார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, மொத்த ஓட்டு மதிப்பான 10 லட்சத்து 98 ஆயிரத்து 882-ல் பாதிக்கு மேற்பட்ட ஓட்டுகள் வாங்க வேண்டும். தற்போதைய நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கிட்டத்தட்ட பாதி ஓட்டுகள் உள்ளன. மம்தாவின் திரிணாமுல் காங்கிரசின் 48,049 ஓட்டுகளைக் கழித்துவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஓட்டுகள் 4 லட்சத்து 12 ஆயிரம் ஆகும்.

இந்த நிலையில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகள் பிரணாப்பை ஆதரிக்க முன்வந்துள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. (சமாஜ்வாடி-68,812; பகுஜன் சமாஜ்-43,349). இதன் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான ஆதரவு ஓட்டுகள் 5 லட்சத்து 24 ஆயிரம் ஓட்டுகளாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இது வெற்றி வாய்ப்புக்கு 25 ஆயிரம் ஓட்டுகளே குறைவு என்பதால், மற்ற கட்சிகள் ஆதரவுடன் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 3.04 லட்சம் ஓட்டுகளும், இடதுசாரி கட்சிகளுக்கு 51 ஆயிரம் ஓட்டுகளும் உள்ளன.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!