ரூ.1000 கோடி நஷ்டம், நாமக்கல் கோழிப் பண்ணைகள் மூடும் அபாயம்.

poulty farming in Namakkal

தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் (2012–13) கோழிப்பண்ணை தொழிலில் ஏறத்தாழ ரூ.1000 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலம் சார்பில் கோழிப் பண்ணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:–

கடந்த 2012–13–ம் நிதி ஆண்டில் முட்டைக்கோழி ஒன்றிற்கு கிட்டத்தட்ட ரூ.60 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது பல பண்ணையாளர்களுக்கு தெரியாது. 2012–13–ம் நிதி ஆண்டில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 32 லட்சம் முட்டைக்கோழி குஞ்சுகள் வீதம் சுமார் 3 கோடியே 84 லட்சம் முட்டை கோழி குஞ்சுகள் பண்ணைகளில் விடப்பட்டு உள்ளதால், 2012–13–ம் ஆண்டில் நமது நாமக்கல் மண்டலத்தில் மட்டும் முட்டைக்கோழி பண்ணை தொழிலில் சுமார் ரூ.230 கோடியே 40 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் கறிக்கோழி பண்ணை தொழிலில் கிலோ ஒன்றுக்கு (உயிருடன்) ரூ.5.01 வீதம் 2012–13–ம் ஆண்டில் மதிப்பிடப்பட்டு உள்ள மொத்த கறிக்கோழி உற்பத்தியான 153.2 கோடி கிலோவில் (உயிருடன்) சுமார் ரூ.766 கோடியே 83 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக வல்லுநர்கள் மதிப்பிட்டு இருக்கிறார்கள். மொத்தமாக கோழிப்பண்ணை தொழிலில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.1000 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

பருவ மழை பொய்த்தது, தீவன மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக அதன் விலையேற்றம் தவிர்க்க முடியாமல் போனது. கோழித்தீவனம் விலை தொடர்ந்து உயர்வாகவே இருக்கும். அதை எதிர்கொண்டு தொழில் நடத்த வேண்டிய சூழ்நிலையே உள்ளது. இந்தியா முழுவதும் இதே நிலைதான்.

கட்டுபடியாகாத முட்டை விலை காரணமாக கடந்த 6 மாத காலமாக பண்ணைகளில் குஞ்சு விடுவது ஓரளவு குறைந்து உள்ளதால், வரும் மாதங்களில் முட்டை உற்பத்தி குறைந்து காணப்படும். தற்போதைய (ஏப்ரல்–2013) நிலவரப்படி நாள் ஒன்றிற்கு நாமக்கல் மண்டலத்தில் சுமார் 3 கோடியே 54 லட்சத்து 84 ஆயிரம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வருகிற மே மாதம் 3 கோடியே 48 லட்சத்து 83 ஆயிரமாகவும், ஜூன் மாதம் 3 கோடியே 44 லட்சத்து 7 ஆயிரமாகவும், ஜூலை மாதம் 3 கோடியே 33 லட்சத்து 94 ஆயிரமாகவும், ஆகஸ்டு மாதம் 3 கோடியே 26 லட்சத்து 38 ஆயிரமாகவும், செப்டம்பர் மாதம் 3 கோடியே 21 லட்சத்து 84 ஆயிரம் ஆகவும் குறையும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

நாமக்கல்லில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும், பல பண்ணைகளில் வயது முதிர்ந்த கோழிகளை கழிவு கோழிகளாக விற்பனை செய்து வருவதாலும் முட்டை உற்பத்தி மேலும் குறைய வாய்ப்புள்ளது. கோழிப்பண்ணையை தொடர்ந்து நடத்த முட்டை விலையை ஏற்றுவது ஒன்றே வழி. எனவே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் உயிர்நாடி கொள்கையான ‘என் முட்டை என் விலை’ என்ற நிலையை தொடர்ந்து கடை பிடித்தால் மட்டுமே முட்டை விலையை உயர்த்த இயலும். எனவே பண்ணையாளர்கள் அனைவரும் என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையை விட 25 பைசா மட்டுமே குறைத்து விற்பனை செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லாவிட்டால் பண்ணையை மூடுவதை தவிர வேறு வழியில்லை. மேலும் பண்ணையாளர்கள் ஒத்துழைத்தால், இந்த வருடம் முட்டை விலை 4 ரூபாயை தாண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *