வெளி மாநில மஞ்சள் வரத்தால் விலை சரிவு - விவசாயிகள் கவலை

Turmericதமிழகத்திற்கு வெளி மாநிலத்தில் இருந்து  மஞ்சள் அதிகளவு வருவதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வந்து மஞ்சளை வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி  பல்வேறு தனியார் வியாபாரிகளும் மஞ்சளை வாங்கி வெளிமாநிலம், நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். கடந்த சில வாரங்களாக மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மூட்டை ரூ. 10 ஆயிரத்தை தாண்டி மஞ்சள் சில வாரங்களிலேயே ரூ. 12 ஆயிரத்தை தாண்டியது. கூட்டுறவு சங்கத்தில் அதிகப்பட்சமாக மூட்டை ரூ. 11750ம், தனியார் மண்டிகளில் ரூ. 12,250 வரையும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் மஞ்சள் விலை ரூ. 9,500ஆக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, வெளி மாநிலங்களுக்கு மஞ்சள் வாங்கி செல்வது குறைந்துள்ளது. அதனால்தான் விலை இவ்வளவு குறைந்துள்ளது என தெரிவத்தனர்.   நேற்று வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் 625 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. விரலி ரகம் அதிகப்பட்சமாக மூட்டை ரூ. 8919 க்கும் குறைந்தபட்சம் ரூ. 6360 க்கும் ஏலம் போனது. அதேபோல் குண்டு ரகம் அதிகபட்சமாக மூட்டை ரூ. 7179க்கும் குறைந்தபட்சம் ரூ. 5599க்கும் ஏலம் போனது. பனங்காலி ரகம் அதிகபட்சமாக ரூ. 16,110க்கு விலை போனது. விரலி 314 மூட்டைகளும் உருண்டை 241 மூட்டைகளும் பனங்காலி 70 மூட்டைகளும் என மொத்தம் 625  மூட்டைகளும் ரூ. 25 லட்சத்திற்கு விற்பனையானது.  கடந்த சனிக்கிழமை மெட்டாலாவில் நடந்த ஏலத்தில் மஞ்சள் மூட்டை அதிகப்பட்சமாக ரூ. 8,250க்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.

விலை குறைவு குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, கர்நாடகா, ஆந்திராவில் மஞ்சள் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. அங்கிருந்து ஈரோடு மார்க்கெட்டிற்கு லாரி, லாரியாக மஞ்சள் வந்து குவிகிறது. இதனால் மஞ்சள் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. வெளிமாநில மஞ்சள் விலை மூட்டை ரூ. 7 ஆயிரத்திற்கு குறைவாக விற்றாலும் தமிழக மஞ்சள் தரத்தினால் ரூ. 8 ஆயிரத்திற்கு அதிகமாக விற்று வருகிறது. இன்னும் சில வாரங்களில் மஞ்சள் விலை ரூ. 10 ஆயிரத்தை தாண்டும் என தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!