தீயா வேலை செய்யணும் குமாரு - திரை விமர்சனம்

-சிவராஜன்

theeya velai seyyanum kumaruதாத்தா, அப்பா, அண்ணன் என தனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாக இருக்க, சித்தார்த்தும் இவரது அலுவலகத்தில் கூடவே வேலை பார்க்கும் ஹன்ஷிகாவைக் காதலிக்கிறார். இவர்களுடன் வேலை பார்க்கும் கணேஷ் ராமும் ஹன்ஸிகாவுக்கு காதல் தூது விட கிளி யார் கையில் சிக்கியது என்பதை என்பதை ஜாலியாக காமெடியுடன் சொல்லியிருக்கிறார்கள்.

படம் துவங்கியதில் இருந்தே படம் முடிகிற வரை கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் படம் நகருகிறது. படம் துவங்கி இருபது நிமிடங்களுக்குப் பிறகே என்ட்ரி கொடுக்கிறார் சந்தானம். காதலிப்பவர்களுக்கு ஐடியா கொடுத்து காசு சம்பாதிக்கும் கேரக்டர் இவருடையது. சித்தார்த்துக்கு இவர் கொடுக்கும் ஐடியாக்கள் ஒவ்வொன்றும் காமெடி கலக்கல்.

கொஞ்சம் அப்பாவித்தனத்துடன் ஹன்சிகாவை வளைய வரும் பையனாக வருகிறார் சித்தார்த். பள்ளிக்கூடத்து மாணவனாக இவர் வரும் காட்சியும் இவருக்கு அத்தனை கச்சிதமாக இருக்கிறது. மற்ற காட்சிகளில் இவரைப் பார்க்கும் போது, கன்னம் எல்லாம் வற்றிப் போய், கொஞ்சம் வயதானவர் போன்ற தோற்றமும் தெரிகிறது. கணேஷ் வெங்கட்ராம் தன் காதலை ஹன்ஸிகாவிடம் சொல்லுமிடத்தில் சித்தார்த் பீல் பண்ணுகிற காட்சியைப் பார்க்கணுமே… அப்போது நமக்கே சித்தார்த் மீது பரிதாபம் வந்து விடுகிறது.

ஹன்ஸிகாவின் முகபாவனைகளை இந்தப் படத்திலும் ரொம்பவே ரசிக்க முடிகிறது. பாடல்களுக்கு குத்தாட்டமும் போடுகிறார்.

அந்த மாதிரி தொழில் செய்யும் இடத்தில் மனோபாலா, இவர் தான் வேஷ்டி கட்டியிருப்பதற்கு விளக்கம் சொல்லுகிற காட்சி சரியான காமெடி. டெல்லி கணேஷ், ஜான் விஜய் போன்றோர் வருகிற காட்சிகள் ஒன்றிரண்டுதான் என்றாலும் சிரிக்க வைப்பவை. அதுவும் ரயில் நிலையத்தில் டெல்லி கணேஷ் பேசுகிற பேச்சு இருக்கிறதே… செம கலகலப்பு.

விஷால், சமந்தா ஆகியோரும் முகம் காட்டியிருக்கிறார்கள். ஹன்ஸிகாவுக்கு தோழியாக வருகிறார் ஜெனிபர், இன்னொருவர் வித்யா ராமன். ஆர்.ஜெ. பாலாஜியும் பாஸ்கியும் வருகிற இடங்களும் சந்தானத்துக்கு இணையாக காமெடி களைகட்டுகிறது.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சத்யா. அழகென்றால் இவள்தானா சூப்பர் மெலடி என்றால், கொழு கொழு, லவ்வுக்கு பாடல்கள் ஆட்டம் போட வைப்பவை. மற்ற பாடல்களும் ஓ.கே.தான். பின்னணி இசையில் பல இடங்களில் ம்யூட் அடித்திருக்கிறார். படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் நலன் குமாரசாமி. பல இடங்களில் வசனங்களில் தனி டச் தெரிகிறது!

படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. படம் பார்க்கப் போனோமா ஜாலியா என்ஜாய் பண்ணினோமா என்று இருப்பதற்கு ஏற்ற காமெடி படமாக கொடுத்திருக்கிறார் சுந்தர் சி. கலகலப்பு பார்ட் 2 என்றே இந்தப் படத்தை சொல்லலாம். அந்த அளவுக்கு படம் ஒரு காமெடி ஸ்பெஷல்!

நன்றி : www.tamildigitalcinema.com

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!