பரமத்தி வேலூரில் வெள்ளைக்கொடி வெற்றிலை விலை வீழ்ச்சி.

Betelபரமத்தி வேலூரில், வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளைக்கொடி வெற்றிலையின் விலை சுமை ஒன்றுக்கு ரூ.1,500 வரை குறைந்து உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா காவிரி கரையோர பகுதிகளில் உள்ள பொத்தனூர், வேலூர், பாண்டமங்கலம், அணிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பொய்யேரி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டு உள்ளது.

இங்கு விளையும் வெற்றிலைகள் சேலம், மதுரை, கோவை, ஊட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வரப்படுகிறது.

பரமத்தி வேலூரில் கடந்த வாரம் நடைபெற்ற வெற்றிலை ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை மார் 104 கவளிகள் கொண்ட சுமை ரூ.6 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதேபோல கற்பூரி வெற்றிலை சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக் கொடி வெற்றிலை மார் 104 கவளிகள் கொண்ட சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது. இதேபோல கற்பூரி வெற்றிலை சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது.

இதில் வெள்ளைக்கொடி வெற்றிலை சுமை ஒன்றுக்கு ரூ.1,500 வரை விலை குறைந்து உள்ளது. இதேபோல கற்பூரி வெற்றிலை சுமை ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது.

கர்நாடகா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை பெய்துள்ளதால் அப்பகுதிகளில் வெள்ளைக்கொடி வெற்றி உற்பத்தி அதிகரித்துள்ளது  இதனால் தற்போது வெள்ளைக்கொடி வெற்றிலையின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் வெள்ளைக் கொடி வெற்றிலையின் விலை குறைந்து உள்ளது. ஆனால் கர்நாடக பகுதிகளில் கற்பூரி வெற்றிலை பயிரிடப்படுவதில்லை. இதனால் பரமத்தி வேலூர் பகுதியில் கற்பூரி வெற்றிலையின் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!