3 வாரங்களுக்கு பின் நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் தொடங்கியது.

Turmericநாமகிரிப்பேட்டையில் 3 வாரங்களுக்குபின் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், விரலி ரகம் ரூ. 8 ஆயிரத்திற்கு விற்பனையானது.

தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வந்து மஞ்சளை வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி  பல்வேறு தனியார் வியாபாரிகளும் மஞ்சளை வாங்கி வெளிமாநிலம், நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். கடந்த சில வாரங்களாக மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மூட்டை ரூ. 10 ஆயிரத்தை தாண்டி மஞ்சள் சில வாரங்களிலேயே ரூ. 12 ஆயிரத்தை தாண்டியது. கூட்டுறவு சங்கத்தில் அதிகப்பட்சமாக மூட்டை ரூ. 11750ம், தனியார் மண்டிகளில் ரூ. 12,250 வரையும் விற்பனையானது. இந்நிலையில் தொடந்து மஞ்சள் விலை குறைந்து வந்தது. கடந்த மாதம் விரலி ரகம் மூட்டை ரூ. 6 ஆயிரத்திற்கு குறைந்தது. இதனால் விலை கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகள் மஞ்சளை இருப்பு வைக்க தொடங்கினர். மேலும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரித்ததால் விலை மேலும் குறையத்தொடங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள் கடந்த மூன்று வாரங்களாக மஞ்சளை வாங்க முன் வராததால் நாமகிரிப்பேட்டையில் கூட்டுறவு சங்கம், தனியார் மண்டிகளில் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 3 வாரங்களுக்கு பிறகு நேற்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடந்தது.  வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் 642 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. விரலி ரகம் அதிகப்பட்சமாக மூட்டை ரூ. 8699 க்கும் குறைந்தபட்சம் ரூ. 6379 க்கும் ஏலம் போனது. அதேபோல் குண்டு ரகம் அதிகபட்சமாக மூட்டை ரூ. 6579க்கும் குறைந்தபட்சம் ரூ. 5898க்கும் ஏலம் போனது. பனங்காலி ரகம் அதிகபட்சமாக ரூ.16,000க்கு விலை போனது. விரலி 377 மூட்டைகளும் உருண்டை 215 மூட்டைகளும் பனங்காலி 50 மூட்டைகளும் என மொத்தம் 642  மூட்டைகளும் ரூ. 28 லட்சத்திற்கு விற்பனையானது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *