நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 19 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

www.mysangamam.com galleryநாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 19 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் விடப்பட்டது.

தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வந்து மஞ்சளை வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி  பல்வேறு தனியார் வியாபாரிகளும் மஞ்சளை வாங்கி வெளிமாநிலம், நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். கடந்த சில வாரங்களாக மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மூட்டை ரூ. 10 ஆயிரத்தை தாண்டி மஞ்சள் சில வாரங்களிலேயே ரூ. 12 ஆயிரத்தை தாண்டியது. கூட்டுறவு சங்கத்தில் அதிகப்பட்சமாக மூட்டை ரூ. 11750ம், தனியார் மண்டிகளில் ரூ. 12,250 வரையும் விற்பனையானது. ஆனால் சில வாரங்களில் மஞ்சள் விலை ரூ. 7 ஆயிரத்திற்கு குறைந்தது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரித்ததால் மேலும் விலை குறையும் என்று வியாபாரிகள் கவலையடைந்தனர். இதனால், ஈரோடு, சேலம் மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சில வாரங்களாக நாமகிரிப்பேட்டை தனியார் மற்றும் கூட்டுறவு சங்கத்திலும் ஏலம் ரத்து செய்யப்பட்டது. 3 வாரங்களுக்கு பின் கடந்த வாரம் மஞ்சள் ஏலம் நடந்தது. அப்போது விரலி ரகம் மூட்டை ரூ. 8 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம் அதிகப்பட்சமாக ரூ. 8899க்கு விற்பனையானது. குறைந்தபட்சம் ரூ. 6899க்கும் விலை போனது, அதேபோல் குண்டு ரகம் மூட்டை  அதிகப்பட்சமாக ரூ. 7219க்கும் குறைந்தபட்சமாக ரூ. 6819க்கும் பனங்காலி ரகம் அதிகப்பட்சமாக ரூ. 13,699க்கும் குறைந்தபட்சமாக ரூ.8,499க்கும் விற்றது.  மொத்தம் 451 மூட்டைகளும் ரூ.19 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *