பரமத்தி வேலூர் அருகே ஐந்து மணல் லாரிகள் சிறைபிடிப்பு

sand_lorryப.வேலூர் அருகே அரசு விதிமுறையை மீறி, அரசு மணல் குவாரியில் மணல் அள்ளிச் சென்ற, ஐந்து லாரிகளை, கிராம விவசாயிகள் சிறைபிடித்தனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூரை அடுத்துள்ள வெங்கரை பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு முன் அரசு மணல் குவாரி செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.இந்த மணல் குவாரியிலிருந்து அரசு அனுமதித்துள்ள அளவிற்கும் மேல் மணல் அள்ளப்படுவதாக இப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால், ஆற்றை ஒட்டிய கரையோர பகுதியில், நிலத்தடி நீர் வெகுவாக குறையும் சூழல் உருவானது. தவிர, ஆற்றில் அதிக ஆழமாக மணல் அள்ளுவதன் மூலம், ஆற்றில் தண்ணீர் வரும்போது, நீண்டு செல்ல வாய்ப்பில்லை. அதுபோல், ஆற்றில் உள்ள பள்ளத்தில் சுழல் உருவாகி, ஆபத்தை ஏற்படுத்தும் எனவும், விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு, அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. வழக்கம்போல், அதிக ஆழமாக மணல் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கரை கிராம விவசாயிகள், நேற்று காலை, 6 மணியளவில், அவ்வழியாக சென்ற ஐந்து மணல் லாரிகளை சிறைபிடித்தனர்.

“அரசு விதிமுறைப்படி மணல் அள்ளுவதாக உறுதியளித்தால் மட்டுமே லாரி விடுவிக்கப்படும். இல்லையெனில், லாரியை விடுவிக்க இயலாது’ என, எச்சரித்தனர். சம்பவ இடத்துக்கு, ப.வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அரசு விதிமுறைப்படி மணல் அள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸார் உறுதியளித்தனர். அதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை, கிராம விவசாயிகள் விடுவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *