கேரளா, கர்நாடகாவில்  வேஷ்டி விற்பனை 40 சதவீதம் சரிவு, திருச்செங்கோடு வேஷ்டி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிப்பு

            கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வேஷ்டி விற்பனை 40 சதவீதம் சரிந்ததை அடுத்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் பகுதி வேஷ்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும்பாதிப்படைந்துள்ளனர்.

                நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி, கைலாசம்பாளையம், குமரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி மூலம் வேஷ்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். ஜரிகை வேஷ்டி, காட்டன் கரை வேஷ்டி, கேரளா மாநில மக்கள் அதிகம் பயன்படுத்தும் செட்டு முண்டு, பெரிய கரை வேஷ்டிகள் 4 முழு வேஷ்டி மற்றும் 8 முழு வேஷ்டிகள் என ரூ.100 முதல் ரூ.500 வரை பல்வேறு ரகங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

                திருச்செங்கோடு வேஷ்டி உற்பத்தியாளர்களுக்கு ஈரோடு ஜவுளி சந்தை மிகப் பெரிய மார்க்கெட்டாக இருந்து வருகிறது. திருச்செங்கோடு பகுதியில் உற்பத்தியாகும் வேஷ்டிகள் ஈரோடு ஜவுளி மார்க்கெட் வழியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வேஷ்டி உற்பத்தி மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றன. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் இ வேபில் முறை ஆகியன வேஷ்டி சந்தையை தற்போது கடுமையாக பாதித்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 40 சதவீதத்திற்கும் மேல் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் வேஷ்டி உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து திருச்செங்கோடு வேஷ்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்தாவது:-

                 திருச்செங்கோடு பகுதியில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் வேஷ்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது.இத் தொழிலைச் சார்ந்து சைசிங் தொழில், சலவைத் தொழில், ஜரிகை சுற்றுதல் என பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன. இத் தொழில்கள் மூலம் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள பண மதிப்பிழப்பு, ஜி எஸ்டி வரிவிதிப்பு மற்றும் இ வேபில் சிஸ்டம் மூலம் வேஷ்டி விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. உற்பத்தி விலைக்கு ஏற்ப உரிய விலை கிடைக்காத காரணமாக உற்பத்தியாளர்களும் வேஷ்டி உற்பத்தியினை படிப்படியாக குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது இரு ஷிப்டுகள் நடைபெற்ற உற்பத்தி ஒரு ஷிப்டாக குறைக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை குறைக்க தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பும் வழங்கும் சூழல் நிலவுகிறது.இந்நிலையில் நூல் விலை நிலையானதாக இல்லாமல் அடிக்கடி விலையேற்றம் செய்யப்படுவதாலும் வேஷ்டி உற்பத்தி ஒருபுறம் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. இதனால் தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதுடன் வாழ்வாதாரத்திற்காக வேறு தொழில்களுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. வாரம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் கூலியாக பெற்றத் தொழிலாளர்கள் வேஷ்டி உற்பத்தி குறைப்பு காரணமாக தற்போது பாதி கூலி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி மற்றும் இ வே பில் முறைகளை எளிமைப்படுத்த வேண்டும் இதன் மூலம் வேஷ்டி விற்பனை உயரும் எனத் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!