நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியம், திருச்செங்கோடு அருகே, ரோட்டில் தேங்கும் மழை நீர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

திருச்செங்கோடு அருகே நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியத்தால் ரோட்டில் மழை நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

வாகன விபத்துகளில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கவனக் குறைவு ஒரு காரணமாக இருந்தாலும் பல விபத்துகளுக்கு முறையாக பராமரிக்கப்படாத ரோடுகளும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. அரசு ஆண்டு தோறும் ரோடுகளை பராமரிக்க பல கோடி ரூபாய்கள் செலவிட்டு வந்தாலும் இதனை முறையாக செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பல ரோடுகள் முறையான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டு விபத்துகளுக்கு காரணமாக மாறியுள்ளன.

இந்த வகையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் பிரிவு ரோடு பகுதியில் ராசிபுரம் மூன்று வழி ரோடும், நாமக்கல் நான்கு வழி ரோடும் இணைகின்றன. ரோடு இணையும் பகுதியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் சுமார் 300 அடி தூரம் புதிய ரோடு அமைக்கப்பட்டது. ரோட்டில் தேங்கும் மழை நீர் உடனடியாக வடிந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு ரோட்டின் இரு பகுதியிலும் மழை நீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த ரோட்டில் தற்போது லேசாக மழை பெய்தாலே ரோட்டில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. வயதானவர்கள் மற்றும் பெண்கள் டூவீலரில் செல்லும் போது வழுக்கி விழுந்து விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகனங்களை ஒதுக்கி ஓட்டிச் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதும் சூழல் நிலவுகிறது. நன்கு திட்டமிடாமல் அமைக்கப்பட்டுள்ள ரோட்டின் வடிகால் வழியாக செல்லும் மழை நீர் வெளியேற உரிய வழிவகை செய்யாததால் தற்போது ரோட்டில் மழை நீர் தேங்கி விபத்துகளுக்கு காரணமாக இருப்பதுடன் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் ரோடும் சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து குமரமங்கலம் பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கூறியதாவது:-

திருச்செங்கோடு-நாமக்கல்-ராசிபுரம் பிரதான ரோட்டில் பிரிவு ரோடு அருகே மழை நீர் தேங்கி நின்று மிகப் பெரிய இடையூறை ஏற்படுத்தி வருகிறது. தினசரி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் இந்த ரோட்டின் வழியாக சென்று வருகின்றனர்.முறையாக திட்டமிடாமல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மிக அலட்சியமாக இந்த ரோட்டினை அமைத்துள்ளனர். முறையாக வடிகால் வசதி செய்யாததால் பல லட்சம் செலவு செய்து அமைக்கப்பட்ட ரோடு தற்போது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. உடனடியாக மாவட்ட கலெக்டர் இது குறித்து கவனத்தில் கொண்டு எடுத்து குமரமங்கலம் பிரிவு ரோடு பகுதியில் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

 

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!