தொழிலாளியின் தலையில் காயமின்றி மூளை அறுவை சிகிச்சை, திருச்செங்கோடு, விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

திருச்செங்கோடு விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரியில் தொழிலாளி ஒருவருக்கு தலையில் காயமின்றி மூளையில் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனைபுரிந்துள்ளனர்.

             தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (54). இவர் உசிலம்பட்டி  அரசு போக்குவரத்துக் கழக கேண்டீனில் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கடும் தலைவலி, தலைசுற்றல் மற்றும் மூக்கிலிருந்து  ஒருவகையான திரவம் வடிதல் ஆகியவற்றால் கடுமையாக பாதிப்படைந்தார். தமிழகத்தில் முக்கியமான பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

  இந்த நிலையில் நண்பர்களின் ஆலோசனையின்படி மாரிச்சாமி திருச்செங்கோடு விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரியை சிகிச்சைக்காக அணுகினார். ஆஸ்பத்திரியின் உதவித்தலைவர் டாக்டர் கிருபாநிதி மற்றும் டாக்டர்கள்  நோயாளிக்கு பல்வேறு பரிசோதனைகளை  நடத்தினர். இதில் தலையில் மண்டை ஓட்டிற்கும் மூளைக்கும் இடையே பாதுகாப்பு அரணான ஜவ்வு படலத்தின் இடையே தேங்கி நிற்கும் மூளை தண்டுவட திரவம் ஜவ்வில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக மூக்கில் வடிவது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வருவதோடு மூளைக்கு நோய்த்தொற்று எளிதில் பரவும் அபாயம் இருந்தது.

   மூளைப் பகுதி ஜவ்வில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க வழக்கமாக மண்டை ஓட்டை பிளந்துதான் அறுவை சிகிச்சை செய்வார்கள். ஆனால் விவேகானந்தா ஆஸ்பத்திரி டாக்டர்கள் இந்த அறுவைசிகிச்சையை எளிதாக செய்ய திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து மாரிச்சாமிக்கு எண்டாஸ்கோபி மூலம் மூளை ஜவ்விலேற்பட்ட ஓட்டையை அடைக்க டாக்டர்கள் குழு 4 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்தனர். காலில் இருந்த தசையை எடுத்து மூளை ஜவ்வில் ஏற்பட்ட ஓட்டையை அடைத்தனர். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாரிச்சாமி படிப்படியாக குணமடைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். இந்த அறுவைசிகிச்சையை விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரி  இணை மேலாண் இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், துணைத்தலைவர் டாக்டர் கிருபாநிதி, காது மூக்கு தொண்டை நிபுணர்கள் டாக்டர்  யோகேஷ், டாக்டர்  சென்னியப்பன்,  நரம்பியல் நிபுணர் டாக்டர் மோகன் ஆகியோர் அடங்கிய குழு இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

      இந்த அறுவை சிகிச்சை குறித்து விவேகானந்தா ஆஸ்பத்திரியின் துணைத் தலைவர் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி கூறியதாவது:- தமிழகத்தி்ல் சென்னை , கோவை போன்ற பெருநகரங்களில்  செயல்பட்டு வரும் ஆஸ்பத்திரிகளில் மட்டுமே இம்மாதிரியான மிகத் துல்லிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வரப்படுகிறது. தற்போது பெருநகர ஆஸ்பத்திரிகளுக்கு இணையாக கிராமப்பகுதியான எளையாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரியிலும்  இம்மாதிரியான சிக்கலான அறுவை சிகிச்சை மிகக் குறைந்த செலவில் செய்யப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!