திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயில் மரகத லிங்கம் உண்மையானதா ? ஆய்வு செய்ய எச் ஆர் என் சி கூடுதல் கமிஷனர் உத்தரவு சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் உண்மையானதா என ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இந்து சமய துறை அதிகாரிகள் விசாரணை நடத்தக் கூடாது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொங்கு ஏழ் சிவத் தலங்களில் முதன்மையானதும் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்றதுமான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள், கேதாரி கவுரி, நாகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். வைகாசி விசாகத் தேர்த் திருவிழா  ஆண்டு தோறும் கோலாகலமாக நடந்து வருகிறது. சதய நட்சத்திரத்தினரின் பரிகார தலமாக அர்த்தநாரீஸ்வரர் மலை கோயில் இருந்து வருகிறது. மேலும் ஆண்பாதி, பெண்பாதியாக மாதொருபாகனாக இறைவன் காட்சியளிக்கும் இத்தலம் குறித்து திருஞானசம்பந்தர் தனது முதலாம் திருமுறை, திருப்பதிகத்திலும், செங்கோட்டுவேலவர் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும் பாடியுள்ளனர். ஆணும் பெண்ணும் சமம் என வலியுறுத்தும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள் தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். புதியதாக மணமாகும் மணமக்கள் தங்களது வாழ்க்கையை தொடங்கும் முன் திருச்செங்கோடு வந்து அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு செல்வது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது.

 

இவ்வளவு புகழ்பெற்ற இக்  கோயிலில் பல கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள் மற்றும் சிலைகள் உள்ளன. இதேபோல் கேதார கவுரி சிவனை நோக்கி விரதம் இருந்த போது வழிபட்டதாகக் கூறப்படும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் இக்கோயிலில் உள்ளது. பல ஆண்டுகளுக்கும் முன்னர் கோவில் சிலைகள் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சி நடந்ததை அடுத்து பலத்த பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டும் தினசரி போலீசார் பாதுகாப்பு  ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயில் உண்டியலில் இருந்து காணிக்கை பணத்தினை கோயிலில் அர்ச்சகராக இருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் தொடர்ந்து திருடி வந்தது தெரியவந்தது இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கம், வெள்ளி, மற்றும் வைர நகைகள் குறித்து முறையான கணக்குகள் பராமரிக்கப்படுவதில்லை எனவும், கோயிலில் உள்ள நகைகள் மற்றும் சிலைகள் போலியாக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், பக்தர்களால் வழங்கப்பட்ட உலோகத்தாலான பூஜை பொருட்கள் மற்றும் நகைகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டும், சிலரின் கட்டுபாட்டில் மட்டும் இருந்து வருவதாகவும், கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களும் போலியானதாக இருக்கலாம் எனவும், அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் மற்றும் சொத்துகள் குறித்தும் முறையாக விசாரணை நடத்தி தணிக்கை செய்ய வேண்டும் எனவும் தனியாரிடம் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தது.

 

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ம்தேதி பலகோடி மதிப்புள்ள மரகதலிங்கத்தை சிலர் விற்பனை செய்ய பேரம் பேசி வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் நடத்திய சோதனையில் மரகதலிங்கம் மற்றும் மரகத நந்தி சிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிலையை வைத்திருந்ததாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மணிராஜ் , ஈரோட்டை சேர்ந்த கஜேந்திரன், சந்திரசேகர் என மூன்று பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கம் மற்றும் நந்திசிலை திருச்செங்கோடு பகுதி சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்டது எனவும், இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் சிலை கடத்தல் போலீசார் தெரிவித்திருந்தனர். திருச்செங்கோடு பகுதியில் அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் மட்டுமே மரகத லிங்கம் மற்றும் நந்தி சிலை உள்ளது. சிலை கடத்தல் போலீசாரால் பறிமுதல் செய்துள்ள மரகதலிங்கம் மற்றும் நந்தி சிலைகள் திருச்செங்கோடு மலை கோயிலில் இருப்பதை போன்றே இருப்பதால், திருச்செங்கோடு மலை கோயிலில் தற்போது இருக்கும் மரகத லிங்கம் குறித்து பலத்த சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி திருச்செங்கோடு மலை கோயிலில் இருக்கும் சிலை உண்மையானதா? என்பது குறித்தும், அதன் மதிப்பு குறித்தும் மதிப்பீடு செய்ய வேண்டும் என கோரி திருத்தொண்டர் படையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் இந்து சமய அறநிலையத் துறை கமிஷனுருக்கு இ மெயில் அனுப்பியிருந்தார். இதன் பேரில் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் கமிஷனர் திருமகள்,  சேலம் இந்து சமய அறநிலையத் துறை நகை சரிபார்ப்பு உதவி கமிஷனர் மற்றும் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு வரப்படும் மரகதலிங்கத்தினை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்புவதுடன் அதன் உண்மைத் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனால் திருச்செங்கோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து சமய கூடுதல் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு வரவேற்கத்தக்கது எனவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் முறைகேடுகள் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ள சூழலில் இந்து சமய அறநிலயத் துறை அதிகாரிகளே விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ளதால் உண்மை வெளி வராது எனவும், பழனி மலை கோயிலில் நடந்த முறைகேடுகளை எப்படி சிலை கடத்தல் பிரிவு போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரித்து அம்பலபடுத்தினாரோ அதேபோல் திருச்செங்கோடு மலை கோயில் சிலைகள் குறித்தும், மரகத லிங்கம் குறித்தும் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரே விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!