திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர் திருவிழா ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைகோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அர்த்தநாரீஸ்வரர் திருத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

கொங்கு மண்டலத்தின் முக்கியத் திருவிழாவான திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழா 14 நாட்கள் நடைபெறும். கடந்த 20  ம் தேதி மலையில் கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 23 ம் தேதி  நான்காம் நாள் திருவிழா அன்று அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய சுவாமிகள் மலையில் இருந்து நகருக்கு எழுந்தருளினர்.இதனையடுத்து பல்வேறு சமூகத்தினரின் மண்டபக் கட்டளைகள் நடந்தது.சுவாமிகள் ஒவ்வொரு ஊராக நகர் வலம் சென்றனர்.விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று  முன் தினம் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனைத் தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவ பெருமாள் சுவாமிகள் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.இதனையடுத்து விநாயகர் மற்றும் செங்கோட்டுவேலவர் திருத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு, டிஎஸ்பி சண்முகம், அர்த்தநாரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கருணாநிதி ஆகியோர் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் இழுக்கும் நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி புறக்காவல்நிலையம் அமைக்கப்பட்டு நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவை ஒட்டி கம்பன் விழா, சேக்கிழார் விழா, கண்ணகி விழா உள்ளிட்ட பல்வேறு இலக்கிய நிகழ்வுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!