ரசிகர்களிடம் சிக்கித் திணறிய நடிகர் விஜய் சேதுபதி, போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்ற போலீசார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தனியார் நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, திரைப்பட தயாரிப்பாளர் நிகில் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தனர். இந்நிறுவனத்தின் திறப்பு விழா குறித்த விளம்பர பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று மாலை சங்ககிரி ரோட்டில் நடிகர் விஜய்சேதுபதியை பார்க்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். இதனால் ரோட்டில் போக்குவரத்து பாதிப்படைந்தது. அதேபோல் நிறுவனத்தின் அலுவலகம் சங்ககிரி ரோட்டில் தனியார் வங்கியின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. அலுவலகத்தின் இடம் நெருக்கடியானதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்திற்குள் சென்று திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு மொபைல் போனில் செல்ஃபி எடுக்க தொடங்கியதால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. இதனைக் கண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரசிகர்களை கலைந்து செல்ல கேட்டுக் கொண்டனர். ஆனால் நேரம் ஆக ஆக ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட விஜய் சேதுபதி வெளியேற முடியாமல் தவித்தார். வியர்வையில் நனைந்த அவர் செய்வதறியாது திகைத்து நின்றார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டவுன் போலீசார் கூட்டத்தினுள் சென்று ரசிகர்களிம் சிக்கித் திணறிக் கொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதியை ரசிகர்களிடம் இருந்து மீட்டு அழைத்து வந்தனர். அப்போது ரசிகர்கள் அவரை விடாமல் பின் தொடர்ந்து செல்ஃபி எடுத்தனர். இதனை அடுத்து போலீஸ் ஜீப்பினை நிகழ்ச்சி நடந்த பகுதிக்கு கொண்டு வந்த போலீசார் நடிகர் விஜய் சேதுபதியை போலீஸ் ஜீப்பில் ஏற்றி பத்திரமாக திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றனர். ஜீப்பினை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சுமார் அரைமணி நேரம் போலீஸ் ஸ்டேசனில் இருந்த நடிகர் விஜய் சேதுபதியை அவரது நண்பர்கள் தனி காரில் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!