திருச்செங்கோடு அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து, 16 பேர் காயம்.

திருச்செங்கோடு அருகே தனியார் பஸ் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணம் செய்த 16 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலிருந்து பரமத்தி வேலூருக்கு தனியார் பஸ் சென்றது. அலுவலகம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு திரும்பும் நேரம் என்பதால் பஸ்ஸில் அதிகளவில் கூட்டம் இருந்தது. பஸ் புறப்பட்ட பொழுது கன மழை பெய்து கொண்டிருந்தது. பஸ் திருச்செங்கோடு அடுத்த மீன் கிணறு பகுதியில் சென்று கொண்டிருந்த போது ரோட்டின் குறுக்கே வந்த டூவீலர் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக டிரைவர் பஸ்ஸின் வேகத்தை கட்டுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பாண்டமங்கலத்தை சேர்ந்த உதயன்(30), ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த பிரபு(28), கரூரைச் சேர்ந்த பார்கவி(27),  ஜெயராணி(20), மணியனூர் பகுதியைச் சேர்ந்த கலைவாணி(29), கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமதி(23), கலைசெல்வி(45), மணியனூர் ஆறுமுகம்(33) உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் பஸ்ஸின் இடிபாடுகளில் சிக்கித் தவித்த பயணிகளை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் உனடியாக உரிய சிகிச்சை வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தியதுடன் கூடுதல் டாக்டர்களை வரவழைத்து சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!