தமிழகத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு செய்யப்பட்ட வஃக்பு வாரியத்தின் சொத்துக்கள் மீட்கப்படும். வஃக்பு வாரியத் தலைவர் தகவல்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி கைகாட்டி பள்ளிவாசல் மற்றும் எருமப்பட்டி பள்ளிவாசல்,  சேந்தமங்கலம் ஆகிய பள்ளிவாசல்களில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி பி.ஆர்.சுந்தரம் நாமக்கல் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சி.சந்திரசேகரன், நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவர் மற்றும்  எம்.பியுமான எ.அன்வர்ராஜா ஆகியோர் பங்கேற்று 700 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது,

தமிழக அரசு இஸ்லாமிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. இந்த அரசு அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான அரசு ஆகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை சாதி, மதம் இல்லாமல், அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதாகும். அந்த கொள்கையிலிருந்து சிறிதும் விலகி செல்லாமல் உங்களை முழுமையாக பாதுகாக்கும் அரசாக தற்போதைய அரசு விளங்குகிறது. சமுதாயத்திற்கு தேவையானவற்றை அறிந்து செயல்படுத்தி வருகின்றது.  சேந்தமங்கலம் பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவர் எ.அன்வர்ராஜா பேசும் போது தெரிவித்ததாவது,

பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அரசியல் சட்டம் வழிவகையும் பாதுகாப்பும் அளிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் முத்தலாக் தொடர்பான பிரச்னைகள் எழுந்தபோது அதனை ஷரியத் முறையிலேயே தொடர வழிவகை செய்யப்பட்டது. தற்போதைய முதல்வர் பழனிசாமியும் அதே நிலையைதான் எடுத்துள்ளார்.

 சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்டங்களை அரசு சிறப்பாக கடைபிடித்து வருகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது என்பதை பொதுமக்கள் அறிந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டத்தில் காணப்படும் 2 ஆண்டு சிறை-அபராதம்–ஜீவனாம்சம் போன்ற அம்சங்கள் ஏற்புடையதாக இல்லை. இதே கருத்தைத்தான் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தேன். மதக்கோட்பாடுகளை கடைபிடிப்பதில் அவரவர்க்கு உரிமை உள்ளது. அதற்கு எதிராக இச்சட்டம் உள்ளதால்தான் எதிர்க்கிறோம்.

தமிழகத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு செய்யப்பட்ட வக்பு வாரியத்தின் சொத்துக்களை மீட்டு, அதன் நிதி நிலைமையை பெருக்கி, முஸ்லீம் சமுதாய மக்களுக்கு உரிய நலத்திட்டங்களை அளிக்க உள்ளோம். அந்தச் சொத்துக்களை மீட்கும் வகையில் முதல்கட்டமாக சென்னை, திருவள்ளுர் மாவட்டங்களில் ரூ. 20 ஆயிரம் கோடி அளவிலான சொத்துக்கள் மீட்கப்பட உள்ளது. வக்பு வாரிய உறுப்பினர்கள் மற்றும் இதற்காக நியமிக்கப்படவர்களைக் கொண்டு தமிழகம் முழுவதும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தலைமை ஹாஜிக்கள் இல்லாத மாவட்டங்களில் அந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிநுபான்மையினர் நல அலுவலர் கண்ணன் உட்பட சேந்தமங்கலம் வருவாய் வட்டாட்சியர், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், இஸ்லாமியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!