பாஜகவையும் ரஜினியையும் இணைத்து பார்க்கக் கூடாது – எச்.ராஜா பேட்டி

பாரதிய ஜனதா அரசின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொள்வார்கள், தேர்தல் நேரத்தில் மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என பாஜக தேசிய செயலாளர் ராஜா திருச்செங்கோட்டில் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திருச்செங்கோடு வந்தார். இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான டி.எம்.காளியண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் 4 ஆண்டு கால சாதனைகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அவரிடம் எச்.ராஜா கருத்துகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எச்.ராஜா தெரிவித்தாவது:-

இந்தியா பகைவர்கள் சூழ்ந்த நாடாக இருந்து வந்தது. பிரதமர் மோடி பதவியேற்றவுடன் வெளிநாடுகளுடனான உறவுகள் புதுப்பிக்கப்பட்டதால் தற்போது இருந்த பகைவர்களால் ஏற்பட்ட அச்சம் விலகி பாதுகாப்பன தேசமாக மாற்றப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் 4 ஆண்டு ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களும், கட்சியின் செயல்பாடுகளும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இன்று முன்னேற்றம் கண்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது பொருளாதார தாரளமயமாக்கல் கொள்கையால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்தன.இதனை சார்ந்திருந்த அனைவரும் பாதிப்படைந்தனர்.

தூத்துக்குடி சம்பவம் முழுவதும் சமூகவிரோதிகளாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் கிராமம், கிராமமாக சென்று மக்களை மூளைச் சலவை செய்து போராட்டத்திற்கு வித்திட்டுள்ளனர். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் நாடு முழுவதும் 31 இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாநில அரசு மற்றும் மக்களின் விரும்பம் இன்றி இத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது. தமிழகத்தில் மணல் கொள்ளை என்பது தடுக்க வேண்டியது. உள்ளூர் ஆதாரங்கள் உள்ளூர் மக்களுக்கே என்ற நிலை வரவேண்டும். வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதியை ஊக்கப்படுத்த வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகளுக்கு எந்த ஆற்றிலிருந்தும் மணல் அள்ள கூடாது என உத்தரவிட வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். 6.6.2014 அன்று பாஜக பதவியேற்ற போது பெட்ரோல் விலை 74 ரூபாயாக இருந்தது. ஆண்டுக்கு ரூ 4.10 பைசா என உயர்ந்தது. இன்று ரூ.83 என இருக்கிறது கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.9 மட்டுமே கூடியிருக்கிறது.எனில் ஆண்டிற்கு ரூ2.25 காசுகள் மட்டும் தான் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் விலைவாசி எந்தளவிற்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்கு பெட்ரோல் விலையேற்றத்தையே உதாரணமாக கொள்ளலாம். பெட்ரோல் விலை ஏற்றப்படுகிறது என்பது எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரம். பெட்ரோல் பொருட்களை ஜி எஸ் டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வரப்படுகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இன்று பருப்பு வகைகள், தானிய வகைகள் அனைத்தின் விலையும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றது. காங்கிரஸ் வெளிநாடுகளில் நம்மை பிச்சை எடுக்க வைத்த கட்சி, ஆனால் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ச்சிக்கு வித்திட்ட கட்சி பாஜக. பெண்கள் சம உரிமைகள் பெற வேண்டும் என பாஜக அரசு செயல்பட்டு வருவதுடன் அதற்கான சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. தூத்துக்குடி சம்பவம் குறித்து நடிகர் ரஜியின் கருத்து ஏற்புடையது எனினும் பாஜக ரஜினியை இணைத்து பார்க்க வேண்டாம். தமிழகத்தில் உள்ள இந்து ஆலையங்களின் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு நீதிமன்ற உத்தரவின்படி கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும். இன்றைய சந்தை மதிப்பின்படி கோயில் இடங்களை குத்தகைக்கு விட வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள 38 ஆயிரத்து 635 கோயில்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!