வல்வில் ஓரி விழா ஆலோசனை கூட்டம்- ஆட்சியர் தலைமையில் நடந்தது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி திறப்பு விழா ஆகிய விழாக்கள் அரசின் சார்பில் கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்களை போற்றிடும் வகையில் ஆண்டுதோறும் ஆடி மாதம்17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற ஆடி மாதம் 17 மற்றும் 18 (02.08.2018 வியாழக்கிழமை மற்றும் 03.08.2018 வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படவுள்ள வல்வில் ஓரி விழாவையொட்டி கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்கப்புகைப்பட கண்காட்சி, ஊரகவளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, போக்குவரத்து காவல் துறை, பட்டு வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் விளக்க கண்காட்சி அமைக்கப்படவுள்ளது.

கொல்லிமலை வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் கண்கவர் மலர்கண்காட்சி அமைக்கப்படவுள்ளது. தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மலர்கண்காட்சியை அதிக மக்கள் கண்டு மகிழ்ச்சியடையும் வகையில் சிறப்புடன் நடத்திட வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் கொல்லிமலை முழுவதும் உடனுக்குடன் தூய்மை பணியினை விழாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பாராட்டும் வகையில் மேற்கொள்ள வேண்டும். மேலும் விழாவில் பங்கேற்ற வருகின்ற பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முழுமையாக செய்திட வேண்டும். கொல்லிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கொல்லிமலை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். துணியிலான அல்லது எளிதில் மக்கக்கூடிய பொருட்களால் ஆன பைகளை பயன்படுத்த வேண்டும்.

கொல்லிமலைக்கு சேந்தமங்கலம்-காரவள்ளி வழியாகவும், இராசிபுரம்-முள்ளுக்குறிச்சி வழியாகவும்,  இரண்டு பாதைகளில் சுற்றுலா பயணிகள் வருகைதர இயலும். இரண்டு பாதைகளிலும் நெடுஞ்சாலை துறையினர் சாலை சீரமைக்கும் பணிகளை முழுமையாக விரைந்து முடித்து தேவையான அறிவிப்பு பலகைகளை வைத்திட வேண்டும்.

இந்த ஆண்டு கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படவுள்ள வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர்க்கண்காட்சி திறப்பு விழாவினை மிகச்சிறப்பாக நடத்திட துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு விழாவினை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டுமெனக் ஆட்சியர்  கேட்டுக் கொண்டார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் டாக்டர்ஆர்.காஞ்சனா, நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, கூடுதல் காவல்கண்காணிப்பாளர் சுஜாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சி.மாலதி, திட்ட இயக்குநர் ஊரக வாழ்வாதார இயக்கம் இரா.மணி, இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் பொ.பாலமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!