லாரி ஸ்ட்ரைக், மத்திய அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – முத்தரசன் அறிக்கை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் அகில இந்திய அளாவிலான லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

லாரி உரிமையாளர்கள் முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து, தீர்வுகாண பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்ட போதும், பேசி தீர்வுகாண வேண்டிய மத்திய அரசு அவர்களை தொடர்ந்து அலட்சியப் படுத்தியதன் காரணமாக, தற்போது, நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டிய பொறுப்பும் கடமையும்,  இருப்பதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது.  மத்திய அரசு அலட்சியப் படுத்திய காரணத்தால், வேலை நிறுத்தப் போராட்டம் 5 வது நாளாக தொடர்கின்றது.

லாரி உரிமையாளர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் அவர்களுக்கு மட்டும் உரியதன்று, பொதுமக்களுக்கான கோரிக்கையும் தான் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

அத்தியாவசியப் பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை ஏற்றம் தொடர்வதற்கு லாரி வாடகை உயர்வும் மிக முக்கிய காரணமென்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

நாடு முழுவது கடந்த 5 தினங்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ 7000 கோடிக்கு சரக்குகள் தேக்க மடைந்துள்ளன.

இதன் விளைவாக கட்டுமானப் பொருட்கள், காய்கறிகள், கனிகள், தேங்காய், உணவுப் பொருட்கள், பூ உள்ளிட்ட அனைத்தும் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு இனியும் காலம் கடத்தாது, உடனடியாக லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன் வரவேண்டும்.

சங்க நிர்வாகிகள், பேச்சு வார்த்தைக்கு தாங்கள் தயாராக உள்ளோம். அரசு அழைத்தால் பேச்சுவார்தைக்கு தயார் என்று திரும்ப திரும்ப கூறிய போதும், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். என அந்த அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!