நாமக்கல் மாவட்டத்தில் 11 இடங்களில் சிசிடிவி கேமரா- அமைச்சர் தங்கமணி தொடங்கிவைத்தார்.

நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தினை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் அமைத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் பணி மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான நூலகம் திறப்புவிழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் இன்று நடைபெற்றது. சேலம் மண்டல காவல்துறை துணைத்தலைவர் த.செந்தில்குமார், காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று  மாவட்டத்தில் 11 இடங்களில் ரூ.37 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 66 சிசிடிவி கேமராக்களை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு சாலை பாதுகாப்பிற்காக தமிழக அரசால் ரூ.58 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தற்போது ரூ.37 லட்சம் மதிப்பில் நாமக்கல் மாவட்டத்தில் 11 இடங்களில் 66 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு குற்றத் தடுப்பு மற்றும் வாகன போக்குவரத்து கண்காணிக்கப்படுகின்றது. மேலும் இந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் காவல் நிலையம் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்க்கும் வகையிலும், கைபேசியின் இணைய இணைப்பின் வழியாகவும் பார்க்கும் வகையிலும்  அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.17.40 இலட்சம் மதிப்பில் சாலை பாதுகாப்பிற்காக பல சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளது. அவற்றில் கொல்லிமலை மலைப்பாதையில் 25 பிரதிபளிப்பு குவியாடி கண்ணாடிகள் பதிக்கப்பட்டு விபத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பள்ளிபாளையம் நகர் சந்திப்பில் தானியங்கி சிக்னல்கள், தோள்பட்டை எல்.ஈ.டி ஒளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் ரூ.3.60 இலட்சம் மதிப்பில் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மக்குட்டைமேடு பகுதியிலும், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையிலும், கத்தேரி பிரிவு மற்றும் எஸ்.எஸ்.எம் கல்லூரி அருகிலும் அதிவேக பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட்டு விபத்துகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகர காவல் நிலைய வளாகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகத்தினை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். இந்நூலகத்தில் தமிழக அரசால் சிறார் மன்றத்திற்காக வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் நிதியில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நூலகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். போட்டித்தேர்வுக்காக படிப்பவர்களும் மற்றும் சிறார்களும் நூலகத்தில் புத்தகங்களை படித்து பயன்பெறலாம். மேலும் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அரவது குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சு.செந்தில், சுஜாதா துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், உட்பட நாமக்கல் நகராட்சி ஆணையாளர், வருவாய் வட்டாட்சியர், அரசுத்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!