கருணாநிதி உருவபொம்மைக்கு இறுதி மரியாதை.

திருச்செங்கோடு அருகே, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மைக்கு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து இறுதி மரியாதை செய்தனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவிற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்தை வைத்து கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மொளசி கிராம பொதுமக்கள் கருணாநிதியின் உருவபொம்மை செய்து அதற்கு இறுதிகாரியங்களை செய்தனர். மேலும் தங்களது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் எவ்வாறு இறுதி காரியங்கள் செய்யப்படுமோ அதேபோல் கருணாநிதியின் உருவபொம்மைக்கும் காரியங்கள் செய்து ஒப்பாரி வைத்தும், கோடி எடுத்தும் இறுதி காரியங்கள் செய்தனர். மேலும் உருவபொம்மையை ஊர்வலமாக கொண்டு சென்று இடுகாட்டில் நல்லடக்கம் செய்ததுடன் பொதுமக்களில் மூன்று பேர் மொட்டையடித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மொளசி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வு குறித்து மொளசி பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி என்பவர் கூறியதாவது:- மொளசி பகுதி விவசாயம்சார்ந்த பகுதி, விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக கருணாநிதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார், இதனால் பயனடைந்தவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று, மேலும் பெண்கள் முன்னேற்றம், சிறுபான்மையினர் முன்னேற்றம், கல்வி, தொழில் எனஅனைவரும் பயனடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி என்னைப் போன்ற கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் இதனாலேயே கருணாநிதியை எங்களது குடும்பத்தின் தலைவராகவே நாங்கள் கருதுகிறோம் அதனால் தான் இன்று எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் என்ன சடங்குகள் செய்வோமோ அதனை செய்து அவருக்கு மரியாதை செய்தோம் என்றார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!