தட்டாங்குட்டையில் கிராம சபைக்கூட்டம் - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தட்டாங்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபா கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்மு.ஆசியா மரியம் தலைமையேற்று பேசும் போது தெரிவித்தாவது,

                பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதற்கும், அந்தந்த ஊராட்சிகளில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், அடிப்படை வசதி மேம்பாட்டுத்திட்டங்கள் குறித்தும், புதிதாக மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் விவாதித்து அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டிற்கு 4 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

 அண்ணல் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளான இன்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. கிராமப்புறங்களிலுள்ள மகளிர் ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் கழிப்பிடம் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். அவ்வாறு கழிப்பிடங்கள் இல்லாத நபர்கள் அரசு வழங்கி வருகின்ற மானியத்தினை பெற்று தனிநபர் கழிப்பிடம் அமைப்பதுடன் நில்லாமல் அதனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதனால் எண்ணற்ற கிருமிகள் பரவி பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படக்காரணமாக அமைகிறது. நோய்கள் வராமல் தடுத்திட, நோய் பரவாமல் பாதுகாத்துக் கொள்ள வீட்டையும் வீட்டின் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தட்டாங்குட்டை ஊராட்சியில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள், குடிநீர் வசதிகள், மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கினை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க நாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுப்பொருட்களான காய்கறிகள் வாங்குவதற்கு துணிப்பையையும், உணவு பொருட்கள் வாங்குவதற்கு எவர் சில்வர் பாத்திரங்களையும் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் உடல் ஆரோகியத்தையும் பாதுகாத்து கொள்ளவேண்டும். டெங்கு போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்க ஒவ்வொருவரும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றி நீர் தேங்கக்கூடிய பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப் போன்ற தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும். சுத்தமான நீரில் மட்டுமே டெங்கு காய்ச்சலை ஏற்படுத்த கூடிய ஏடிஸ் எனப்படுகின்ற கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இவற்றை கட்டுப்படுத்திட நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடிவைப்பதுடன், வாரத்திற்கு ஒருமுறையாவது நன்றாக கழுவி சுத்தமாக வைத்திட வேண்டும். அதிக நாட்கள் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தையும், வீட்டையும் சுகாதாரமாக வைத்துக் கொண்டால் எவ்வித நோய் தாக்கமும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

                நீர் சேமிப்பின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து சுகாதார பணியாளர்களிடம் வழங்கவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள்; பேசினார்.

                இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், ஊராட்சியின் நிதி பயன்பாடு, வரவு செலவு கணக்குகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய திட்டப்பணிகளுக்கான செலவுகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தூய்மையே சேவை உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் தட்டாங்குட்டை ஊராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு பொதுமக்களிடம் தண்ணீரை பாதுகாப்பாக மூடிவைத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.  

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!