தபால்துறையின் கடிதம் எழுதும் போட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 7 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு.

மத்திய அரசின் தபால் துறை சார்பில் கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாமக்கல் மாவட்ட தபால் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடந்தது. இதில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று கடிதம் எழுதினர். போட்டிக்கும் முன்னதாக மாணவர்கள் எவ்வாறு கடிதம் எழுத வேண்டும், கடிதத்தின் வடிவம், முகவரி எழுதும் முறை உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு தபால் துறை அலுவலர்கள் விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தாங்கள் எழுதிய கடிதங்களை தபால் துறையினர் வைத்திருந்த தபால் பெட்டியில் போட்டனர்.

இப்போட்டி குறித்து நாமக்கல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் கூறியதாவது: தபால் துறை அறிவித்துள்ள கடிதம் எழுதும் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று கடிதம் எழுதியுள்ளனர். 10 ஆயிரம் மாணவர்களை இப்போட்டியில் பங்கேற்க வைப்பதே இலக்கு எனவும், நவீன அறிவியல் வளர்ச்சிகள் காரணமாக பாரம்பரியமான கடிதம் எழுதும் முறைகளை இளம் தலைமுறையினர் மறந்து வருகின்றனர். இளம் தலைமுறையினர் கடிதம் எழுத ஊக்குவிக்கும் விதமாகவும் கடிதம் மற்றும் தபால் துறை குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் இப்போட்டிகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் பார்திபன், தபால் துறை விற்பனை பிரிவு நிர்வாகிகள் மாதேஸ்வரன், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!