நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு- ஆட்சியர் அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தடுக்கும் வகையில் பொது நல வழக்கு உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதி மன்றம் முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கி உள்ளது.

                அதன்படி, நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறது.

                நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளிக்கு முன்பு ஏழு நாட்களும் தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

      இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். மேலும் அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கு பொது மக்கள் இத்தகைய நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

     மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவோம். அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.  என அந்த அறிக்கையில் ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!